Makaram
மகரம் (Makaram)
உத்திராடம் (2,3,4), திருவோணம், அவிட்டம் 1,2
Sani Peyarchi 2017 2018 2019 2020 Rasi Palan

எதையும் அலசி ஆராய்ந்த பிறகே களத்தில் இறங்கும் மகர ராசி நேயர்களே!

முடியாத காரியத்தைக் கூட முடித்துக் கொடுக்கும் வல்லமை பெற்ற உங்களுக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். இப்பொழுது ஏழரைச் சனி ஆரம்பமாகிவிட்டது. ஏழரைச் சனி என்றவுடனேயே நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே அவரை விரும்பி வழிபடுகின்ற பொழுது திரும்பிய பக்கமெல்லாம் தினந்தோறும் நல்ல செய்தி வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாக விளங்குபவர் சனி பகவான். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் கூட தனாதிபதியாகவும் விளங்குபவர் என்பதால் பணத்தைக் கொடுத்தே விரயத்தையும் கொடுப்பர்.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சனி பகவானை ஒவ்வொரு சனிக்கிழமையும் போற்றிக் கொண்டாடி வழிபட வேண்டும். சனி பகவானை வாரந் தோறும் வழிபட்டு வரலாம். சிறப்பு ஸ்தலங்களாக விளங்கும் மதுரை, தேனி அருகிலுள்ள குச்சானூர் சென்றும் வழிபட்டு வரலாம். திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக் காட்டிலுள்ள அக்னீஸ்வரரையும் வழிபட்டு வரலாம். திருநள்ளாறு, பெரிச்சிக் கோவில் வன்னிமரத்தடி சனீஸ்வரரையும் சென்று வழிபட்டு வரலாம். சனிக் கிழமை தோறும் காகத்திற்கு எள் கலந்த சோறு வைத்து திருப்தியடையச் செய்யலாம்.

உங்கள் சுய ஜாதகத்தில் சனி சஞ்சரிக்கும் நிலையறிந்து, அதன் பாதசார பலமறிந்து, பரிகாரங்களையும் செய்து கொள்வது நல்லது. மேலும் சனிப்பெயர்ச்சி காலத்தில் உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் வீற்றிருப்பது சர்ப்ப தோஷத்தை உருவாக்குகின்றார். எனவே, ஏற்ற இறக்கமான நிலை மாறவும், எடுத்த காரியங்களில் தடை ஏற்படாதிருக்கவும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும், தனவரவில் இருந்த சிக்கல்கள் அகலவும் யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரி காரங்களைச் செய்து கொள்வது நல்லது.

பன்னி ரெண்டாம் வீட்டில்

பகலவன் மைந்தன் நின்றால்

எண்ணில்லா மாற்றம் சேரும்

ஏமாற்றம் நட்பால் சேரும்!

புண்ணியம் வந்து சேர

புகழ்மிகு வாழ்வும் காண

எந்நாளும் சனியின் முன்னால்

எள்தீபம் ஏற்று வீரே!

என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றது.

எனவே, விரயச் சனியின் ஆதிக்கத்தில் வீண் விரயங்கள் ஏற்படாமல் சுபவிரயம் ஏற்பட விழிப்புணர்ச்சி உங்களுக்குத் தேவை.

தொடங்கிவிட்டது ஏழரை!

துணிந்து செயல்பட்டால் சாதனை!

மிகப்பெரிய கிரகமாக சொல்லப் படும் சனி பகவான் இப்பொழுது 12-ம் இடத்தில் சஞ்சரித்து 2, 6, 9 ஆகிய இடங்களைப் பார்க்கிறது. விரயாதி பதியைப் பார்க்கும் அந்த இடங்களின் ஆதிபத்யங்கள் எல்லாம் விரயங்கள் ஏற்படும் என்பது நியதி. எனவே குடும்பச் செலவுகள் கூடுதலாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களை திருப்திப் படுத்த இயலாது.

அவர்களுக்கு என்னதான் நீங்கள் செய்தாலும் அவர்கள் திருப்தியடையவும் மாட்டார்கள். நன்றிகாட்டவும் மாட்டார்கள். இருந்தாலும் நீங்கள் இரக்க குணமுடையவர் என்பதால் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டே இருப்பீர்கள். பொதுவாக 12-ல் வாசம் செய்யும் சனி இடமாற்றம், ஊர் மாற்றம், வாகன மாற்றம், உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் போன்றவைகளை ஏற்படுத்தலாம். அவற்றை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்று சிந்திப்பீர்கள். உங்கள் சுய ஜாதகத்தின் பலமறிந்து முடிவெடுத்துக் கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களில் ஒருசிலருக்கு வெளிநாட்டு யோகம் எண்ணியபடி வந்து சேரும். பொங்கு சனியின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் புகழ் ஏணியின் உச்சிக்கு செல்வர். பொருளாதாரத்தில் மேம்பாடு காண்பர். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் ஒரு சிலருக்கு ஏற்படும்.

பெயர்ச்சியாகும் சனி ஏழரைச் சனியின் தொடக்கமாக அமையப் போவதால் அந்தச் சனியை வரவேற்க நீங்கள், பெயர்ச்சியாகும் நேரத்திலேயே ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பது நல்லது. அல்லது அன்றைய தினம் எந்த நேரத்திலாவது உள்ளூரில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று சனி பகவானை வழிபட்டு வருவது நல்லது.

நவக்கிரகங்கள் நம் ராசியை நாடிவரும் பொழுது, அவற்றைப் போற்றிக் கொண்டாடினால் நன்மைகளை வாரி வழங்குவார். சனி மட்டுமல்ல, எந்த கிரகம் நம் ராசிக்கு வந்தாலும் வரும் கிரகத்தை வழிபட்டால் வளர்ச்சியின் உச்சத்திற்கு செல்ல இயலும். வரும் கிரகம் நமக்கு நன்மைகளை வழங்க அதை எந்த ஆலயத்திற்கு, எந்த நாளில் சென்று வழிபட்டால் எளிதில் வரம் கிடைக்கும் என்பதையும் நீங்கள் அறிந்து கொண்டு நன்மைகளை அதிகம் பெறலாம்.

ஏழரைச்சனியில் விரயச்சனியின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பவர்கள் சக்கரத்தாழ்வார் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள திருமோகூர் சக்கரத்தாழ்வார் வழிபாடு மற்றும் அதற்கு அருகிலுள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் வழிபாடு, காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் லட்சுமி வழிபாடு போன்றவற்றை செய்து வந்தால் தடைக் கற்கள் எல்லாம் தானாக விலகி ஓடும்.

சனியின் பார்வை பலன்கள்!

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும், விளங்கும் சனி பகவான் 12-ம் இடத்தில் இருந்து கொண்டு 2, 6, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே, கொடுக்கல்- வாங்கல்களில் ஒன்றில் வரும் லாபம் மற்றொன்றில் விரயமாகலாம். வருமானப் பற்றாக்குறை அகலும் என்றாலும் மனநிம்மதி இருக்காது. கூட்டாளிகளை நம்பிச் செயல்படும் பொழுது. கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவு கூடும்.

ஆறாமிடத்தைச் சனி பார்ப்பதால் உத்தியோகம் மற்றும் ஜீவன ஸ்தானம் பலம் பெறுகிறது. எனவே, அலுவலகப் பணிகளில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த உயர் பதவிகள் தேடி வரலாம். பிள்ளைகளின் வேலை வாய்ப்புக் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை குறையும். உடன் பணிபுரிபவர்கள் பகையை மறந்து உங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர்.

சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்குகள் கிடைக்கும். கிடைத்த பங்கீடுகளை அண்ணன், தம்பிகளிடம் ஒப்படைத்து விட்டு அதற்குரிய தொகையைப் பெற்றுக் கொண்டு புதிய சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புனிதப்பயணம் மேற்கொள்வீர்கள். தூரதேசப் பயணங்கள் கூட லாபம் தருவதாக அமையும். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்பதற்கான அறிகுறிகள் தென் படும்.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!

4.10.2018-ல் விருச்சிக ராசியில் குரு சஞ்சரிக்கப் போகின்றார். அதன்பிறகு 28.10.2019-ல் தனுசு ராசிக்கு குரு செல்கின்றார். இந்த இரண்டு குருப்பெயர்ச்சிகளும் உங்களுக்கு சில மாற்றங்களைக் கொடுக்கலாம். வரும் மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

விருச்சிகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே, சகோதர உறவு பலப்படும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமடைவதால் மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சியும், கல்யாணக் கனவுகளும் நனவாகும்.

தனுசு ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கலாம்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

13.2.2019-ல் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இதன் விளைவாக உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 12-ல் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றார்கள். இதனால் வருமானம் திருப்தி தரும். வாழ்வில் வசந்தம் சேரும். ஆன்மிகச்செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் உண்டு. உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் நன்மைகளை வரவழைத்துக் கொள்வீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. கூட்டு முயற்சியால் லாபம் உயரும்.

Astrologer Dr. Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001