பெண்ணின் திருமண வயது 21. இது எல்லா இடங்களிலும் பொதுவாக வைக்கப்பட்டுள்ள விளம்பரம். இதை எல்லோரும் கடைபிடித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற காணத்தால் 18 வயது ஆனாலே திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது கடமை என பெற்றோர்கள் நினைக்கத் தொடங்குகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் சொந்தங்கள் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக குழந்தை பிறக்கும்போதே இது என் தங்கை மகனுக்கு, இது என் அண்ணன் மகளுக்கு என ஒரு முடிவெடுத்து வைத்து விடுவார்கள். எனக்குத் தெரிந்து என் பாட்டி உறவில் வரக்கூடிய ஒருவருக்கு வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைத்து, புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தார்களாம். ஆனால் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் திருமணங்கள் செய்வதற்கு தற்போது யாரும் ஒத்துக் கொள்வதில்லை. இளமையிலேயே திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. சரியான வயதில் திருமணம் நடைபெற வேண்டும். பருவத்தே பயிர் செய் என்ற பழமொழிக்கேற்ப வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய பாக்கியம் ஒரு சிலருக்கே அமைகிறது. இப்படி தக்க வயதில் திருமணம் நடைபெறுவதற்கு ஜோதிட ரீதியாக கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருப்பதே காரணம். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என கூறக்கூடிய 7 ஆம் பாவமானது பலமாக இருந்தாலும், 7 ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் சுபர் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும், சுபகிரகங்களின் சாரம் பெற்றிருந்தாலும் அவருக்கு தக்க வயதில் திருமணம் நடைபெறக் கூடிய பாக்கியம் உண்டாகும். 7ஆம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நட்புகிரக வீடுகளில் அமையப் பெற்றிருப்பதும் நல்லது.

நவகிரகங்களில் சுபகிரகங்கள் என வர்ணிக்கப்படக் கூடியவைகள் குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரன், சுபர்சேர்க்கைப் பெற்ற புதன் ஆகும். சுபகிரகங்கள் 7 ஆம் வீட்டில் அமையப் பெற்றாலும், 7 ஆம் அதிபதி சுபகிரக சேர்க்கை பெற்று, சுபகிரகங்களின் தசாபுக்தி திருமணவயதில் நடைபெற்றாலும் இளமையிலே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். 7 ஆம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயும், சுபகிரக சேர்க்கை, சுபகிரக நட்சத்திரத்தில் அமையப் பெற்றாலும், சுபர் பார்வை பெற்றாலும் இளம் வயதில் திருமணம் நடக்கும். சுபகிரகங்களில் முக்கிய கிரகமான குரு, தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 ஆகிய வீடுகளை பார்வை செய்வார். சுபகிரகமாகிய குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான 2 ஆம் வீட்டிறோ, 2 ஆம் அதிபதிக்கோ சுக்கிரனுக்கோ இருக்குமேயானால் தக்க வயதில் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

திருமண வயதை அடைந்த ஆண், பெண் இருவருக்கும் பாவகிரகங்களின் தசாபுத்திகள் நடைபெற்றாலும் அந்த பாவ கிரகம் 2 அல்லது 7 ஆம் பாவத்தில் அமையாமல் இருப்பது நல்லது. திருமண வயதில் பாவ கிரக திசையில் சுக்கிரனின் புக்தியோ, சுக்கிரனின் நட்சத்திரங்களில் அமையப் பெற்ற கிரகங்களின் புக்தியோ நடைபெற்றால் தக்க வயதில் திருமணம் கைகூடும்.